கோர் மற்றும் சாட்டிலைட் போர்ட்ஃபோலியோ உங்களிடம் இருக்கிறதா?
‘‘உடலால் உழைத்து சம்பாதிக்கும் ஒரு டாலரைவிட அறிவால் ஜெயித்து சம்பாதிக்கும் ஒரு டாலர் இரு மடங்கு இனிமை வாய்ந்தது” என்று பால் நியூமேன் கூறியது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும். போட்டி, பந்தயம், சூது, அதிர்ஷ்டம் என்று பல பெயர்களில் உலாவரும் இந்த உணர்வால்தான் தருமனும் மனைவியைப் பணயம் வைத்து ஆடினான்.
ரோமானிய சாம்ராஜ்யத்தில் அரங்கில் போட்டியிடும் களரி வீரர்கள் மேல் பந்தயம் கட்டி ஆடிய பழக்கம் இன்றும் கிரிக்கெட் வீரர்கள் மேல் பந்தயம் கட்டச் சொல்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் சூதாட்டம் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் நடைபெறுவதால், அதைச் சட்டபூர்வமாக்குதலே நல்லது என்னும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கும் அளவுக்கு இந்தச் சூதாட்ட உள்ளுணர்வு (Gambling Instinct) பெருகியுள்ளது. கடந்த தலைமுறையினர் குதிரை ரேஸ், சீட்டாட்டம் என்று பணத்தை இழந்தார்கள். இன்றைய தலைமுறையினர் பங்குச் சந்தையைச் சூதாடும் இடமாக நினைத்து, அதில் இறங்கி அவஸ்தைப்படுகிறார்கள்.
கடந்த ஏழு மாதங்களில் செபியின் தலைவர் அஜய் தியாகியே கவலை தெரிவிக்கும் அளவுக்கு பல லட்சக் கணக்கான டீமேட் அக்கவுன்ட்டுகள் தொடங்கப் பட்டுள்ளன. இதற்குக் காரணமாகப் பலரும் கைகாட்டுவது கொரோனாவை. வீட்டிலிருந்தே வேலை என்ற நடைமுறை வந்ததில் வீட்டுக்குள் முடங்கி, பொழுதுபோக்குக்காகப் பங்குச் சந்தைப் பக்கம் வந்தவர்கள் சிலர்; தங்கள் வருமானத்தை கொரோனா பதம் பார்த்ததால், கூடுதல் வருமானம் தேடுவதற்காக பங்குச் சந்தையை நோக்கி வந்தவர்கள் பலர். இந்த ராபின்ஹுட் இன்வெஸ்டர்களிடம் இருக்கும் சூதாட்ட எண்ணத்துக்கு வெறும் கொரோனா மட்டுமே காரணம் அல்ல; நம்முள் பதுங்கியிருக்கும் சூதாட்ட உள்ளுணர்வும் நம்மை பங்குச் சந்தைக்கு உள்ளே இழுக்கிறது என்று பிஹேவியரல் ஃபைனான்ஸ் கூறுகிறது.
சூதாட்டமாக மாறும் முதலீடு..!
பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைக் தரக்கூடிய சிறந்த முதலீட்டுக் களமாக இருப்பது பங்குச் சந்தை. ஆனால், அங்கு நுழைந்த பலரும் தங்களை அறியாமலேயே மெல்ல மெல்ல சூதாட்ட உணர்வுக்கு அடிமையாகி பணத்தைத் தொலைத்து வருகிறார்கள். இதைத் தடுக்க என்ன வழி, பங்குச் சந்தை தரும் அதீத வருமானமும் வேண்டும்; நம்மை நிதானமிழக்கச் செய்யும் சக்தி வாய்ந்த இந்தச் சூதாட்ட உணர்வை நமக்கு சாதகமாக மாற்றவும் வேண்டும் என்றால், என்ன செய்வது?
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் சூதாட்டம் ரூ.5,000 கோடிக்கு மேல் நடைபெறுவ தால், இதைச் சட்டபூர்வமாக ஆக்க வேண்டும் எனப் பலரும் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்!
கோர் மற்றும் சாட்டிலைட் போர்ட்ஃபோலியோ உத்தி..!
இந்த இடத்தில் நமக்குக் கை தருவதுதான் கோர் மற்றும் சாட்டிலைட் போர்ட்ஃபோலியோ உத்தி. நாம் முதலீடு செய்ய விரும்பும் பணத்தை இரு விதங்களாக - கோர் எனவும், சாட்டிலைட் எனவும் பிரித்துக் கொள்ளலாம். முதலில், கோர் போர்ட்ஃபோலியோ பற்றி...
கோர் போர்ட்ஃபோலியோ (INVESTMENTS)
1. இது நம் முதலீட்டுக்கு வலு சேர்க்கும் அடித்தளமாக இருப்பதோடு, நமது நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு டிவிடெண்ட் வருமானத்துடனும், சீரான வளர்ச்சியுடனும் இருக்க வேண்டிய தளம்.
2. நாம் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் பணத்தில் 80 - 90% அளவு இதில்தான் இருக்க வேண்டும்.
3. இதற்கு நாம் தேர்வு செய்யக் கூடிய பங்குகள் தரம் வாய்ந்தவை யாகவும், நல்ல அடிப்படைகளை (fundamentals) கொண்டவை யாகவும், வருமானம் வளர்வதற் கான சாத்தியக்கூறுகளுடனும் இருக்க வேண்டும். ஃபண்ட மென்டல் அனாலிசிஸ் அடிப் படையில் பங்குகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
4. அதிக ஏற்றத் தாழ்வுகள் இன்றி சீரான வளர்ச்சியைத் தரக்கூடிய, வெளிப்படையான மேனேஜ்மென்ட் அவசியம்.
5. இதற்காக வாங்கப்படும் பங்குகள் சரியான விலையில் வாங்கப்பட வேண்டும் என்பதால், பொறுமையாகக் காத்திருந்து, சந்தை சரியும் நேரங்களில் குறைந்த விலையில் வாங்க வேண்டும்.
6. இந்தப் பங்குகளில் அடிக்கடி வாங்கி விற்கும் வியாபாரம் தவிர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் வரிச் செலவுகள் இன்றி செல்வம் வளரும்.
7. ரிலையன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி போன்ற லார்ஜ்கேப் பங்கு களுடன், கண்டிப்பாக நன்கு வளரும் என்று நம்பிக்கையூட்டும் மிட்கேப் பங்குகளையும் இந்த கோர் போர்ட்ஃபோலியோவில் வைக்கலாம்.
8. இது நீண்டகால போர்ட் ஃபோலியோ என்பதால் சந்தை சரியும் வேளைகளில் தைரியமாக இன்னும் சிறிது வாங்கிச் சேர்க்கலாம்.
சாட்டிலைட் போர்ட்ஃபோலியோ (INTRADAY TRADING)
1. இது நம் சூதாட்ட உணர்வுக்கு, அதாவது டிரேடிங் உணர்வுக்குத் தீனி போடும் தளம் என்பதால், இதில் டிவிடெண்ட் முக்கியமில்லை. துரிதமான வளர்ச்சியை இதில் உள்ள பங்குகளில் எதிர்பார்க்கலாம்.
2. நம் பங்குச் சந்தை முதலீட்டில் 10 - 20% பங்குகள் இப்படிப்பட்டதாக இருக்கலாம்.
3. இதற்கு நாம் தேர்வு செய்யும் பங்குகள் உடனடி ஏற்றம் (Momentum) தரக்கூடியவையாக இருப்பது அவசியம். ஆகவே, டெக்னிக்கல் அனாலிசிஸை இங்கு பயன்படுத்தலாம்.
4. அதிக ஏற்ற தாழ்வுகளுடன்கூடிய (volatile) பங்குகளைத் தேர்வு செய்யலாம்.
5. சந்தையின் போக்கு பற்றி கவலைப் படாமல், பங்குகளின் போக்கை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படலாம்.
நாம் முதலீடு செய்ய விரும்பும் பணத்தை இரு போர்ட் ஃபோலியோவாக அதாவது, கோர் எனவும், சாட்டிலைட் எனவும் பிரித்துக்கொண்டு செய்வது நீண்டகாலத்துக்கு மிகச் சிறந்த அணுகுமுறையாக இருக்கும்!
6. வரிச் செலவுகள், கமிஷன் குறித்து சிந்திக்காமல், அடிக்கடி வாங்கி விற்கும் வியாபாரத்தில் அதாவது, இன்ட்ரா டே டிரேட், ஸ்விங் டிரேட் போன்றவைக்கு இது நல்ல தளம்.
7. நீண்டகாலத்துக்கு நாம் இந்தப் பங்குகளை வைத்துக்கொள்ளப் போவதில்லை என்பதால், அன்றைய போக்கை வைத்து மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளைத் தேர்வு செய்யலாம்.
8. சந்தை சரிந்தாலோ அல்லது நாம் வாங்கிய பங்கின் விலை வீழ்ச்சி அடைந்தாலோ உடனடியாக விற்று வெளியேறுவது அவசியம்.
இப்படி இருவேறு போர்ட் ஃபோலியோக்களை நிர்வகிக்கும்போது, நம் அனைவரிடமும் இருக்கும் சூதாட்ட உணர்வும் ஈடேறும்; கோர் போர்ட் ஃபோலியோவும் பாதிப்படையாது. சாட்டிலைட் போர்ட்ஃபோலியோ அவ்வப்போது தரும் சிறு வெற்றிகள் நமக்குத் திருப்தி அளிக்கும். நஷ்டம் வந்தாலும், கோர் போர்ட் ஃபோலியோவை பலப்படுத்தவே அது உதவும்!
No comments:
Post a Comment