சீதா ராமம் - திரை விமர்சனம்:- பான் இந்தியா படமாக ரசிக்க வைக்கிறதா?
ராணுவ வீரர் துல்கர் சல்மானுக்கு சீதா மகாலட்சுமி என்ற பெயரில் முகவரி இல்லாமல் தொடர்ந்து காதல் கடிதங்கள் வருகிறது. கடிதம் எழுதும் பெண்ணை தேடிக் கண்டுபிடிக்கிறார். பின்னர், இருவரும் காதலை தொடர்கிறார்கள். ஒரு கட்டத்தில் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதியை கொல்லும் பணி துல்கர்சல்மானுக்கு வருகிறது. இதற்காக எல்லை தாண்டி செல்கிறார். அவர் திரும்பி வந்தாரா? சீதா மகாலட்சுமி யார்? இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? ராஸ்மிகா யார்? என்பது படத்தின் மீதிக்கதை.
துல்கர் சல்மான் நடிப்பின் மூலம் படத்தை அழகாக நகர்த்துகிறார். மிருணாள் தாகூரிடம் வெளிப்படுத்தும் காதல், காஷ்மீர் மோதலை தடுக்கும் விவேகம், எல்லை தாண்டி எதிரிகளை வீழ்த்தும் வீரம், சிறை சித்ரவதை என்று கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் துல்கர். அவரது காதலியாக வரும் மிருணாள் தாகூர் வசீகரிக்கிறார்.
காதல் உணர்வை வெளிப்படுத்துவதிலும் ஜீவன். அவர் யார் என்ற உண்மை வெளிப்படுவதில் திருப்பம். பாகிஸ்தானை சேர்ந்த அப்ரீத்தாக வரும் ராஷ்மிகாவுக்கு அழுத்தமான வேடம். அதை அவர் சிறப்பாக செய்து முடித்துள்ளார். கிளைமாக்சில் தான் யார் என்று அறிந்து கதறும்போது படம் பார்ப்பவர்களை உருக வைக்கிறார்.
ராணுவ உயர் அதிகாரிகளாக வரும் பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், சுமந்த், சச்சின் படேகர், மற்றும் தருண் பாஸ்கர் ஆகியோர் கொடுத்த வேலையை திறம்பட செய்துள்ளனர்.
ஒரு காதல் கதையை கவித்துவமாக கொடுத்து கவனம் பெறுகிறார் இயக்குனர் ஹனு ராகவபுடி. ஆர்வத்தை தூண்டும் திரைக்கதையின் மூலம் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்.
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை சிறப்பு. பி.எஸ்.வினோத், ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா காஷ்மீர் அழகை அள்ளுகிறது.
Review Rating - 4.35/5
No comments:
Post a Comment