கடாவர் - திரை விமர்சனம் - தனியாவர்த்தன நாயகியாக அமலாபால்
உடற்கூராய்வு மற்றும் தடய அறிவியல் துறை நிபுணராக பணிபுரிகிறார் அமலாபால். நகரில் நடக்கும் தொடர் கொலைகளை பற்றி காவல் அதிகாரி ஹரீஸ் உத்தமன் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக தடயங்களை அமலாபால் சேகரிக்கும்போது திடுக்கிடும் பல தகவல்கள் கிடைக்கிறது.
இறுதியில் கொலைகளை செய்வது யார்? கொலைக்கான காரணம் என்ன? அமலாபால் எப்படி கண்டுபிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
அமலாபால் முதன் முதலில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாய்ஸ் கட்டிங் செய்யப்பட்ட தலைமுடி, கண்ணாடி நெற்றியில் விபூதி என்று ஆளே மாறிப்போயிருக்கிறார்.
கொலையாளிகளின் மேல் இருக்கும் கோபம், இளம்பெண் மீது இருக்கும் கருணை என்று கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனி நாயகியாக, தன்னால் படத்தை தோளில் சுமக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் அமலாபால்.
ஹரீஸ் உத்தமன் நிறைவாக நடித்திருக்கிறார். முனீஸ்காந்த் வரும் இடங்களில் கலகலப்பும் தொடர்கிறது. நிழல்கள் ரவி சிறிது நேரம் வந்தாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். வேலு பிரபாகர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுல்யா ரவி அப்பாவி முகத்தோடு வந்து கொடூர மடைவது பரிதாபம். ரித்விகா வழக்கம் போல் கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார்.
திரில்லர் கலந்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் மலையாள இயக்குனர் அனூப் எஸ்.பணிக்கர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரஞ்சின் ராஜின் பின்னணி இசை படத்திற்கு பலம்.
Review Rating - 3.75/5
No comments:
Post a Comment