டைரி - திரை விமர்சனம்:- அசரடித்த இரண்டாம் பாதி! ஆனால் முதல் பாதி?
ஊட்டியில் 13-வது கொண்டை ஊசி வளைவில் அடிக்கடி நடக்கும் விபத்தினால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் புதிதாக சப்-இன்ஸ்பெக்டராக பயிற்சி முடித்த அருள்நிதி தன்னுடைய முதல் வழக்காக நகைக்காக புதுமணத் தம்பதியை கொலை செய்யும் கும்பலை கண்டுபிடிக்க விசாரணையில் இறங்குகிறார். 16 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
அருள்நிதி பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். பேருந்து பயங்கரத்தை முகபாவனை மூலம் ரசிகர்களுக்குச் சொல்லும் அருள் சண்டை காட்சியில் வேகம் காட்டுகிறார். பவித்ரா மாரிமுத்துவை காதலிக்கும் போது நம்மை ரிலாக்ஸ் ஆக்குகிறார். அமானுஷ்ய கதைக்கு வேண்டிய பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார் அருள்நிதி. அவருக்கு அடிக்கடி வந்து போகும் கடை போல் திரில்லர் படங்கள் அமைவதால் போகிற போக்கில் அப்லாஸ் அள்ளுகிறார்.
முக்கிய கதாபாத்திரங்களை விட படத்தில் காட்டப்படும் துணை கதாபாத்திரங்களுக்கு அதிக காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. பவித்ரா மாரிமுத்து விசாரணையில் அருள்நிதிக்கு உதவியாக மாறுவது சறுக்கல். கோயமுத்தூர் பஸ் ஸ்டாண்ட், அதன் பயணம் என்று முதல் முறையாக பேருந்தை வைத்து திகில் கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது.
முதல் பாதி குழப்பமாக சென்றாலும் அதன் காரணத்தை பின் பாதியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் இன்னாசி பாண்டியன். பின் பாதியில் வரும் அரைமணிநேர படம் நம்மை திகிலடிக்க வைக்கிறது. கிஷோரின் விபத்திற்கு காரணமும், அருள்நிதி யார் என்பதும் சஸ்பென்சாக விரிவது நல்ல இடம். கிளைமேக்ஸ் காட்சியில் பேருந்து வரும் போது திக் திக் என்றிருக்கிறது. திகில் பட ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் முதல் பாதியை படமாக்கியிருந்த விதம் பாராட்டுக்குரியது. எடிட்டர் ராஜா சேதுபதிக்கும் கடும் உழைப்பு தேவைப் பட்டிருக்கிறது. இசை அமைப்பாளர் ரோன் யதோன் யோகன் இசை பயத்தை உண்டுபண்ணுகிறது. ஜெயப்பிரகாஷ், ஷாரா, சாம்ஸ், அஜய்ரத்னம், டி.எஸ்.ஆர். ஆகியோர் மனதில் நிற்கிறார்கள்.
Review Rating - 4.35/5
No comments:
Post a Comment